Saturday, 6 November, 2010

ராயல் சல்யூட்
கோவையில் பிஞ்சுக்குழந்தைகளைக் கொன்ற மாபாதகன் மோகன்ராஜை கோவை போலீசார், என்கவுண்டரில் சுட்டுத் தள்ளி உள்ளனர்.

இது போல உடனுக்குடன் தண்டனைகள் கிடைத்தால் தான் இது போன்ற மிருகங்கள் உருவாகாத நிலை வரும்.

கோவை மாநகர ஆணையர் சொன்னது போல ஒரு மாதத்துக்குள்ளாகவே தீர்ப்பு கிடைத்து விட்டது.

கருகிய பிஞ்சுகளின் ஆத்மா அமைதியடையட்டும்.

திரு. சைலேந்திர பாபு எமக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம்.

அவருக்கு எமது ராயல் சல்யூட்.

Friday, 22 October, 2010

முன்னணி வலைப் பதிவராக சில வழிகள்.


உங்க வலைப்பூவுல உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க சில வழிமுறைகள்....

உங்க பிளாக் பக்கம் யாருமே வர மட்டேன்றாங்களா?
அப்படியே வந்தாலும் பின்னூட்டம் போட மாட்டேன்றாங்களா?
பாலோயர்ஸ் எண்ணிக்கை கம்மியா இருக்கா?
எல்லாப் பதிவர்களும் உங்களைப் பத்தியே பேசணுமா?
நீங்க போட்ட பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தணுமா?
எல்லாத்துக்கும் மேல நீங்க பிரபல பதிவராகணுமா?

கவலையே படாதீங்க.
உங்க எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு இருக்கு.

நாளை ஒரு நாள் பொறுங்க.

அட்டகாசமான தீர்வு சொல்றேன்.

Sunday, 3 October, 2010

கவிஞரின் ஐயம்


கவிஞர் திரு. மகுடேஸ்வரன் அவர்களின் சமீபத்திய பதிவும், அது தொடர்பான பின்னூட்டங்களும் கீழே.

ஒரு சிறந்த கவிக்காவியம் எழுதியவரின் மன வருத்தங்களைக் காட்டுவதற்காகவே இந்தப் புது மாதிரியான பதிவு.


என்னத்தைச் சொல்ல...!

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மரபுச் செய்யுள்களில் வடித்துப் பதிவேற்றிய பகுதிகளை இதுகாறும் வாசித்திருப்பீர்கள். இவற்றை எல்லாரும் வாசித்தீர்களா அல்லது திறந்து பார்த்துவிட்டுக் கடந்துபோய்விட்டீர்களா என்பது குறித்து எனக்கு ஐயம் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், இந்தப் பகுதிகளில் இடப்படவேண்டிய பின்னூட்டங்களின் அக்கறையின்மை என்னை அவ்வாறு எண்ணச் செய்துவிட்டது. நீங்கள் ஏதாவது கூறப்போக நான் அதுகுறித்துக் கடுமையாக எதிர்வினை ஆற்றிவிடுவேனோ என்ற அச்சம் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கலாம். மூன்றாம் தரமான அக்கப்போர் விவாதங்களில் பதிவுலக நண்பர்கள் காட்டும் முனைப்பை நம் தேசப் பிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படைப்பு விவகாரத்தில் காட்டாதது ஒன்றும் தற்செயலானது இல்லை. நீங்கள் எதற்கு யோக்கியதைப் பட்டவர்களாக இருக்கிறீர்களோ அதற்கேற்ற அரசியல், கருத்துலகம், ஆட்சித் தலைமை, கலை இலக்கியம், சமூக வாழ்க்கை போன்றவற்றுக்கே தகுதியுடையவர்கள் ஆகிறீர்கள். விதிவிலக்குகளை இனங்கண்டு போற்றாதவரை முன்னெடுத்து முழங்காதவரை இங்கே எதுவும் மாறாது.

காந்தியின் நிலைப்பாடுகளோடு இங்கே எல்லாரும் யாவரும் பெரிதும் முரண்படவும் செய்வோம். எனக்கும் அவரது ஒற்றைப்படையான மதவாதச் சிந்தனைகள் பல ஏற்புடையவை அல்ல. இந்தக் கவிதைகளிலே கூட ‘ஆய்பொருளில் கருத்துயர்ந்த கீதைபோன்ற சொற்றொடர்களை அமைக்கும் போது எனக்குள் எளிதில் தணியாத பதற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், அதுவே காந்தியாரின் கருத்தும் என்பதால் என் நிலைப்பட்டுக்கு அங்கே என்ன வேலை ? அந்த ஒன்றோ அல்லது இன்னபிறவோ அவரைக் கண்டு வியக்கும் போற்றும் செயல்களுக்குத் தடையாக இருக்கப் போதுமானவையும் அல்ல. அந்தக் காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்து, ஏன் இந்தக் காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்தும், அவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முன்பொருமுறை நான் பெரியார் காப்பியம் எழுதுவதாக முடிவு செய்து பகுதி எழுதி முடித்தும் இருந்தேன். அதற்காகக் கத்தை கத்தையாகப் புத்தகங்கள் வாங்கிப் பெரிய தொகையாகச் சேர்த்திருந்தேன். தமிழினி பதிப்பகமும் அந்த நூலை வெளிவரவிருக்கும் நூலாக அறிவித்திருந்தது. அந்த நேரமாகப் பார்த்து பெரியார் என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகிக்கொண்டிருந்தது. முடிந்தது கதை. எங்கும் பெரியார் திரைப்படம் பற்றியே பேச்சு. கவனிக்கவும், பெரியார் என்கிற சமூகச் சீர்திருத்தவாதியைப் பற்றிய பேச்சே இல்லை. பெரியாராக சத்யராஜ் நடிக்கிறாராம், அது சிவாஜி கணேசன் நடிக்க விரும்பியிருந்த ரோலாம். பெரியார் விபச்சார விடுதிக்குப் போவது போல் காட்சிகளை எடுக்கிறார்களாம். இளையராஜா பெரியார் திரைப்படத்திற்கு இசைமயமைக்க மறுத்துவிட்டாராம். ஜோதிர்மயி பெரியாருக்கு ஜோடியாக நடிக்கிறாராம். குஷ்பு மணியம்மையாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். ஒட்டுமொத்த தமிழ்ப் பெண்களையே கேவலமாகப் பேசிய குஷ்பு அவ்வேடத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்று போலி அறிவு ஜீவிகள் மத்தியில் விவாதங்களாம். அந்த வேடத்தை ஏற்க அவரே மிகப் பொருத்தமானவராம். ஏப்ரல் மாதத்திலே ஸ்டான்லி அண்ணாதுரையாக நடிக்கிறாராம். அண்ணா ஒப்பனையில் இருக்கும் அவரோடு ஒரேயொரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒட்டுமொத்தப் படக்குழுவே போட்டிபோடுகிறதாம். விஜய் ஆதிராஜ் வீரமணியாம். தமிழ்நாடு அரசு படத்துக்கு இலட்சக் கணக்கில் மானியத்தை வாரியிறைக்கிறதாம். தமிழ்நாட்டு முதலமைச்சரே எடிட்டிங் டேபிளில் உட்காராத குறையாகப் படவேலைகளில் ஆர்வம் காட்டுகிறாராம். அடப்போங்கடா ஙொய்யாலெ... இந்த நேரத்தில் பெரியார் காப்பியத்தை எழுதவும் மாட்டேன் வெளியிடவும் மாட்டேன் என்று பதிப்பாளரிடம் தெரிவித்துவிட்டு அமர்ந்துவிட்டேன்.

காந்தியைப் பற்றியும் எழுதிக்கொண்டிருந்தபோது அவ்வாறு ஏதாவது வலிய மனத்தடை ஏற்பட்டிருக்கலாம். நான் உங்களின் உதாசீனங்களிலிருந்து ஒருவேளை தப்பியிருப்பேன்.

(கலாநேசன், வெண்புரவி, மதுரை சரவணன், கொல்லான், மோகன்குமார் ஆகியோருக்கு என் சிறப்பு நன்றிகள்)

10 comments:

gemini275 said...
This post has been removed by the author.
gemini275 said...

போலித்தனமான மதிப்பீடுகளின் பின்னர் தான் உலகம் சுழற்கிறது என்பது எந்த யோசிக்கும் மூளைக்கும் தெரியும்.
உலகமயமாக்கலின் முக்கியமான குறியே மேலை தேசத்தில் உதித்த தவறான போலித்தனங்களை உயர்ந்ததை போல் நம்ப செய்து ஏமாற்றி கொள்ளை அடிப்பது தான். மழுங்கடிக்க படும் மூளை திறத்தால் இந்திய சிந்தனை மரபின் வீச்சினை உணரும் திறனற்று செய்வது அறியாராய் சமுக பிரக்ஞை இன்றி மாக்களென எம் இனம் வாழ பழகி விட்டதில், எம்மால் உயர்ந்த விஷயங்களை கிரஹித்து பாரட்ட இயலும் நினைப்பது கடும் பாலையில் சந்தனமுல்லை படர்ந்து துளிர்க்கும் என்பதற்கு ஒப்பே.
கவிஞரே! காந்தியுடன் எமக்கு ஒப்பு இல்லையெனிலும் உமது சமுதாய பரிவின் பால் உருவான இந்த நற்றமிழ் முயற்சிக்கு
தலை வணங்கி என்னை உரமேற்றி கொள்கிறேன்

rajasundararajan said...

அவர் போதித்த அஹிம்ஸையே இன்னதென்று புரியாதவன் நான். எடுத்துக்காட்டாக, கருப்பசாமி கோவிற் கடாவெட்டு ஹிம்சையா? அல்லது விலைகொடுத்தொரு பெண் அம்மணத்தைச் சோதனைப் பயன் கொள்வது ஹிம்சையா?

இந் நிலையில், //நீங்கள் எதற்கு யோக்கியதைப் பட்டவர்களாக இருக்கிறீர்களோ அதற்கேற்ற அரசியல், கருத்துலகம், ஆட்சித் தலைமை, கலை இலக்கியம், சமூக வாழ்க்கை போன்றவற்றுக்கே தகுதியுடையவர்கள் ஆகிறீர்கள்// என்று வேறு...

இம் மிரட்டல் என்ன ஹிம்சையா அல்லது அஹிம்சையா? நமக்கு வந்து சேர்ந்திருக்கும் இந்த அரசியல், கருத்துலகம், ஆட்சித் தலைமை, கலை இலக்கியம், சமூக வாழ்க்கை இத்தனையிலும் அவர் கைக்காரியம் இல்லவே இல்லையா? இன்னும் நேரு குடும்பத்தின் தலைமையின் கீழ்த்தான் இருக்கிறோம். இந்திரா காந்தியை ஒரு ஹிந்துவாக்கிக் காட்ட அவர் முன்னின்றதில் அரசியலாற்றுச் சீர்மை, அறத்தாற்றுச் சீர்மை இரண்டு வழியிலும் தெளிவு தேறாத என்போல் ஏற்கெனவே சபிக்கப்பட்டவர்களும் இருக்கிறோம்.

படிமத்தைத் தெய்வமென்று காட்டுகிறீர்கள். படிதலற்ற நிலைபாட்டில் உள்ளார் பாலும் இரக்கமாய் இருங்கள் என்று வேண்டலாமா?

ஜெமினி ! உலகமயமாக்கல் அறிவுலகின் மீது சாட்டையெனச் சுழன்று எதிர்த்து நிற்கும் உரமேற்றி நிற்குமேயன்றி அதன் மீது ஏதொரு ஆதிக்கத்தையும் திணிக்கும் திறனற்றது. உலகமயமாக்கல் என்பது கார்பரேட் பொருளாதாரவாதிகளால் உருவாக்கப்பட்ட யதார்த்தம். அந்த உலகமயமாக்கலால் உங்கள் வீட்டுக் கொல்லையில் முருங்கையும் கீரையும் விளையும் வரை உங்களை உணவுக்கு வழியற்ற வறியவனாக ஆக்கவே முடியாது. மேலும், உங்கள் வீட்டு முருங்கைக்கு வெளிச்சந்தையில் காயொன்று எட்டு உரூபாய் என்ற விலையைத் தந்தும் நிற்கும். எல்லாரும் பட்டினியால் கிடக்கும் நேரத்தில் நீங்கள் உங்கள் 5 முருங்கையை விற்று அன்று பிரியாணி சாப்பிடலாம். உற்பத்தி உலகிற்குள்ளேயே உலகமயமாக்கல் என்பது உங்கள் மூக்கு நுனியை உரச முடியாது நிற்கையில் அறிவுலகு மயங்கி நிற்பதாக நான் எண்ணவில்லை.

ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! அறிந்தோ அறியாமலோ பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிப்பதை ஹிம்சை என்கிற அதே நேரத்தில், பிறவுயிர்கள் அந்த ஹிம்சையால் துன்புறாவண்ணம் வலியையும் துன்பங்களையும் தானே முன்வந்து ஏற்றல்தான் காந்தியின் அஹிம்சை ஆகிறது. என் வரையறை மிகக் கூர்மையாக இல்லாது போனாலும் காந்தியின் மனதில் அத்தகைய நோக்கப்பாடு தான் இருந்திருக்கக் கூடும். நீங்களாக முன்வந்து எந்தத் துன்பத்தையும் ஏற்று நிற்கையில் அதன் வலியும் வீர்யமும் நீர்த்துப் போய்விடுகிறது என்பதுதான் அதன் உள்நின்று இயங்கும் அறிவியல்.

கருப்பசாமி கோயிலுக்குக் கிடா வெட்டுவது ஹிம்சைதான். அரசியல் கோணம் மட்டுமே அதை ஒடுக்கப்பட்ட வர்க்கத்துக்கான அடையாளம் என்று முழங்கி நிற்குமேயன்றி வெட்டப்பட்ட ஆட்டுத் தலையின் திறந்த கண்களைச் சந்தித்துவிட்டுப் பார்த்தால் அது காட்டுமிராண்டித் தனமும் தான். இந்தப் பார்வையை இன்னும் விஸ்தரித்தால் ஒவ்வொரு அரிசி மணியும் ஒரு புல்லின் உயிரே. பிறவுயிருக்குத் தீங்கே இல்லாமால் நம் உணவுப் பழக்கம் அமையவேண்டுமானால் நாம் கனிகளை மட்டுமே உண்ணவேண்டும். மனித ஜீவராசிகள் உணவுப் பழக்கத்தால் Vegetarian அல்லவே அல்ல... நாம் Fruitarianகள். பழ உண்ணிகள். நமக்கு நிகரான மற்ற பிரதான பழ உண்ணிகள் வௌவாலும் குரங்கும் கரடியும். தக்காளிப் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு ஒரு பொட்டல் வெளியில் மலம் கழித்தால் நாம் ஏதொரு உயிருக்கும் கெடுதலில்லாத உணவை உண்டு, நமக்கு உணவான பழத்தையே வேறொரு இடத்தில் விதைக்கவும் செய்தவர்களாக ஆகிறோம். இந்த இடத்தில்தான் உலகிலுள்ள மதங்களிலெல்லாம் உண்மையான உயிரன்பை வலியுறுத்திய மதம் என்று சமணத்தைச் சொல்லவேண்டியிருக்கும். நான் வேறு வேறான செய்திகளை இவ்விடத்தில் சொல்லியிருக்கிறேன் தான் என்றாலும் அஹிம்சை, ஹிம்சை போன்றவற்றை உயிரன்பு, உயிர்வதை இவற்றுக்கிடையிலான வரையறைகளை வைத்துத்தான் நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.

காந்தியால் நமக்குக் கிடைத்த மகத்தான அற்புதம் நம் அரசியல் சுதந்திரம். அந்தக் காலகட்டத்தைத் தவற விட்டிருப்போமானால் நமக்கு இன்றுவரையிலும் அது கிடைக்காமலே போயிருக்கலாம். ஏனெனில், ஆளும் வர்க்கத்திற்கு விடுதலைப் போரை அடக்க ஒரேயொரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் போதும் உருத்தெரியாமல் ஆக்கிவிடுவார்கள் என்பதை நாம் கண்கூடாகவே கண்டோம். அந்த வாய்ப்பைக் காந்தி ஆங்கிலேயருக்கு வழங்கவே இல்லை.

காந்தியின் காலத்திற்குப் பின்பு நிகழ்ந்துவிட்ட இந்திய அரசியலுக்குக் காந்தியைப் பொறுப்பாக்கவேண்டுமானால், அதில் எனக்கும் உங்களுக்கும் பங்காகியுள்ள பொறுப்பைவிடக் குறைவானதாகத் தானே அவரை ஆக்க முடியும் ?

குடும்பத்து அரசியல் வாரிசுகள் என்கிற சீரழிவு தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்த இடத்திலிருந்தே காந்தியைப் புரிந்துகொள்ள நாம் ஆரம்பிக்கலாம். அந்த இடமும் சரியான துவக்கப்புள்ளிதான்.

காந்தியை வழிபாட்டுருவாக்க நான் முயலவில்லை. அப்படி ஏதேனும் தோற்றம் கவிதைப் போக்கில் நேர்ந்திருந்தால் அது உயர்வு நவிற்சியே.

தங்களைப் போன்ற படிதலற்றவர்களுக்கு காந்தி அந்நியமானவர் அல்லர். அவரும் படிதலற்றவரே.

rajasundararajan said...

//அறிந்தோ அறியாமலோ பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிப்பதை ஹிம்சை என்கிற அதே நேரத்தில், பிறவுயிர்கள் அந்த ஹிம்சையால் துன்புறாவண்ணம் வலியையும் துன்பங்களையும் தானே முன்வந்து ஏற்றல்தான் காந்தியின் அஹிம்சை ஆகிறது.//

Sadist-ஆ இருக்கக் கூடாது; masochist-ஆ இருக்கலாம் என்கிறீர்கள். இரண்டும் குணக்கோணல்தான் இல்லையா?

வேதயக்ஞர்கள் உயிர்ப்பலி கொடுத்தல் இக்கால வழக்கில் இன்மையால், கருப்பசாமிக் கடாவெட்டைச் சொன்னேன், அவ்வளவுதான். அரசியல் நாட்டமில்லை. வெட்டப்பட்ட ஆட்டுத் தலையின் திறந்த கண்களைச் சந்தித்து அதிரத் தெரிந்திருக்கிற நமக்கு அரிசிமணிகளின் கண்களைச் சந்திக்கத் தெரியாமற் போனது ஆட்டை விட, உயிர்வரலாற்று இரத்த உறவில், அரிசிமணி விலகி இருப்பதால் அல்லவா?

காந்தியார் பொறுத்துக் கொண்டதைப் பற்றியோ சுபாஷ் சந்திரபோஸ் பொங்கி எழுந்ததைப் பற்றியோ நான் பேசவில்லை. உடல் நோவுதான் ஹிம்சையா, மனநோவு கணக்கில் வராதா என்பதுதான் என் ஐய வினா. ஏனென்றால் மனநோவு வாய்ப்பில்லை என்று கணக்கு வைத்து, எங்களை அம்மணமாக்கித் தங்களது சுரணையின்மையை மீண்டும் மீண்டும் சோதித்துக் கொள்கிறார்கள் அரசியலாளர்.

//காந்தியின் காலத்திற்குப் பின்பு நிகழ்ந்துவிட்ட இந்திய அரசியலுக்குக் காந்தியைப் பொறுப்பாக்கவேண்டுமானால், அதில் எனக்கும் உங்களுக்கும் பங்காகியுள்ள பொறுப்பைவிடக் குறைவானதாகத் தானே அவரை ஆக்க முடியும்?//

மார்க்ஸின் காலத்துக்குப் பிறகு நிகழ்ந்துவிட்ட கம்யூனிஸ உலக அரசியலுக்கு ஸ்டாலினுக்கும் மாவோவிற்கும் இருந்ததைவிடக் குறைவாகத்தானே மார்க்ஸைப் பொறுப்பாக்க முடியும்?

மோசஸின் காலத்துக்குப் பிறகு நிகழ்ந்துவிட்ட விவிலியத் திருத்தல்களுக்கு யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் உள்ளதைவிடக் குறைவாகத்தானே மோசஸைப் பொறுப்பாக்க முடியும்?

(ஓரொரு மரமும் அதனதன் கனிகளால் அறியப்படும் என்றவர் யார்?)

பின்னகர்ந்து குறுக்கினால் திருக்குர்ஆனைப் போலவே காந்தியமும் மார்க்ஸியமும் கூடப் படிதலுறக் காணலாம்.

அந்தக் காலத்துக்கு அது சரி. ஆனால் இந்தக் காலத்துக்கு ஒரு திருக்கிர்ஆனோ, கீர்க்ஸியமோ அல்லது கீந்தியமோ தேவையாய் இருக்கக் கூடும். அது இன்னதென்ற தெளிவின்மையால் இன்று நாம் சோனியா காந்தீயத்திற்கே யோக்கியதைப் பட்டிருக்கிறோம். இதுதான் உண்மை.

(இது ஒரு வழக்காடல்தான். நீங்களும் இதை வாசிக்க நேரும் உங்களை ஒத்த இளைஞர்களும் என்னிலும் சிறப்பாக வாதிக்க முடியும்.)

ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி !

மாசோக்கிஸத்தில் தன்னை வருத்திக்கொள்ளும் இயல்பு சொந்த இன்பத்திற்காகத் தானே அன்றி அதில் வேறெந்தக் குறிக்கோளும் இல்லையே. ஆண் ஒருவன் தன்னைப் புணரும் தருணத்தில் ஆப்பிரிக்கப் பெண் ஒருத்தித் தன் சுண்டு விரலைப் பற்களுக்கிடையில் வைத்து ரத்தம் கொட்டும் வரை கடிக்கிறாள். இப்படி ஒரு காட்சியை Moolade (2004) என்கிற ஆப்பிரிக்கப் படத்தில் கண்டேன். இதுதானே மாசோக்கிசம். தன்னை வருத்திக்கொள்வதில் ஏதொரு நோக்கமும் இல்லை, தன்னின்பத்தை மேலும் முடுக்கிப் பெருக்கிக்கொள்வதைத் தவிர. அத்தகைய இயல்போடு அஹிம்சாவாதிகளின் இயல்பைப் பொருத்திப் பார்ப்பது சரியாகத்தான் இருக்குமா என்பதை நீங்களே சொல்லுங்கள். அஹிம்சாவாதிகளுக்கு தம்முயிர் உள்பட எந்தவோர் உயிரையும் வதைக்கும் நோக்கம் இல்லை. ஆனால், அவ்வாறு வதையுறவேண்டிய சூழல் தம்மெதிர் நிற்குமெனில் அதற்காக துளியும் அச்சப்படுவதில்லை. பின்வாங்குவதுமில்லை.

ஆம் அண்ணாச்சி ! பாலூட்டிகளையும் பறவைகளையும் கொல்வதே கொலையாகக் கருதப்படுகிறது. நுண்ணிய பொருளில் நம் வீட்டுக் கதவும் நிலவும் ’ஒரு பாடம் செய்யப்பட்ட காடு’ என்பதுதானே உண்மை ? நம் கதவு கொலை பட்ட உயிரேயன்றி வேறில்லை. தானாக இறந்து விழும் தென்னை ஓலையில்தான் நாம் நம் குடிலை அமைத்துக்கொள்ள வேண்டும்.

மனவதையும் கணக்கில் வரும். ஆனால், நீங்கள் துவங்கியிருக்கும் இந்தப் பார்வையில் யார் இவற்றைப் பார்த்தார்கள் ? நித்யானந்தரைப் பற்றிய காணொளிச் செய்தி திருமண வாய்ப்பற்ற ஒவ்வொருவன் மீதும் நிகழ்த்தப்பட்ட மனவதையே.
காந்தி ஆங்கிலேயரின் மீது நிகழ்த்திய யுத்தமும் அவன் மனதை நொறுங்க வதைத்த வகையைத்தான் சாரும். அந்த யுத்தத்தால் விளைந்த கனியின் மீது ஒரு பறவையைப் போல் நாம் அமர்ந்திருக்கிறோமா இல்லையா ?

உங்கள் கேள்வியிலேயே கேள்விக்குறியை நீக்கிவிட்டால் கிடைப்பது பதில் தான். மார்க்சியக் குளறுபடிகளுக்கு ஸ்டாலினையும் மாவோவையும் விட மார்க்ஸைக் குறைவாகத்தான் பொறுப்பாக்க முடியும் !

இதை இன்னும் தெளிவான உதாரணத்திற்கு எடுத்துச் செல்கிறேன்.

இஸ்லாத்தின் பெயரால் அல்கொய்தா நடத்திய யுத்தத்திற்கு ஒசாமா பின்லேடனைத்தான் பொறுப்பாக்க முடியும் ! நபிகள் நாயகத்தையா பொறுப்பாக்க முடியும் ?

Vel Kannan said...

கவிஞரே , மன்னிக்கவும்
//இந்த நேரத்தில் பெரியார் காப்பியத்தை எழுதவும் மாட்டேன் வெளியிடவும் மாட்டேன் என்று பதிப்பாளரிடம் தெரிவித்துவிட்டு அமர்ந்துவிட்டேன்//
உங்களின் கோபத்தை மதிக்கிறேன்.
காந்தியை மரபு செய்யுளில் வடித்தமைக்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
வாசித்தவர்கள் எல்லோரும் பின்னூட்டம் இடவேண்டும் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
பொதுவில் நான் இணையத்தில் அதிகம் படிக்கும் பழக்கம் இல்லாதவன் தற்போது பழகி கொண்டிருக்கிறேன். எத்தனயோ நல்ல பதிவுகளை(ஏகப்பட்ட குப்பையும் உண்டு) படிக்கிறேன்.
ஆனால் அவைகளுக்கு எல்லாம் பின்னூட்டம் இட்டதில்லை. அதனால் நான் அதனை படிக்கவில்லை என்றோ நல்லாயில்லை என்றோ அர்த்தம் இல்லை.
இணையத்தில் இதுவெல்லாம் சாதாரணம். புத்தங்களில் எவ்வளவோ நல்ல புத்தகங்கள் இருக்கு. அவையெல்லாம் கொண்டாடபடவேண்டாம் குறைந்த பட்சம்
அதைபற்றிய பேச்சு கூட('இப்படி ஒரு புத்தகம் இருக்கா?') இல்லாமல் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்தவர் தானே. ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு
அப்படியான நல்ல புத்தங்கள் என்றாவது ஒரு நாள் படிக்க வேண்டும் என்று தாகம் எடுப்பவர்களுக்கு நிச்சயமாக தாகம் தணிக்கும். இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. பெரியாரின் காப்பியத்தை கொண்டு வாருங்கள். 'காந்தி அண்ணல்' போல் அதுவும் மிகவும் சிறப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். நன்றி கவிஞரே

நான் வேல்கண்ணன் சொன்னதை வழிமொழிகிறேன்.

சரிதான் நண்பர்களே ! இந்த விவகாரத்தை இதோடு முடித்துக்கொள்வோம்.

வலுவான வாதங்களை முன்வைத்த அண்ணாச்சி ராஜசுந்தரராஜனுக்கு என் வந்தனமும் நன்றியும்.

மற்றும் ஜெமினி, வேல்கண்ணன், செல்வராஜ் ஜெகதீசன் ! நன்றிகள்.Wednesday, 29 September, 2010

ஆசுகவி


தமிழ்ப் புலவர்களின் வரிசையில் காளமேகம் ஒரு அற்புதமானவர்.
ஆசுகவி
(நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்), சிலேடை கவி (ஒரே பாடல் இரு பொருள்), நிந்தா ஸ்துதி கவி (வசை பாடுவது போல் இருக்கும் ஆனால் உட்பொருள் போற்றுவது இருக்கும்) போன்ற கவி வகைகளில் சிறந்து விளங்கியவர்.

தமிழிலக்கணத்தின் பலரும் தொட்டுப் பார்க்காத வகைகளை மிக அழகாகக் கையாண்டவர்.


வரதன் என இயற்பெயர் கொண்டவர்.


கோயில்
உதவியாளராக இருந்தவர்.

மோகனாங்கி
என்பவளிடம் அன்பு கொண்டு சைவ சமயம் சேர்ந்தவர்.

அம்பிகையின் அருளால் கவித்திறன் பெற்றவர்.
திருவானைக்கா உலா, மூவர் அம்மானை, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம் போன்ற பாடல் தொகுப்பை எழுதியவர்.

மற்றவர்கள் கொடுக்கும் குறிப்புகளுக்கேற்ப, வெண்பாக்களை நொடிப்பொழுதில் பாடி அசத்திக் காட்டுவார்.
இவரின் மிக அழகிய, நயமிக்க பாடல் சிலவற்றைக் காண்போம்.

தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் ஆச்சர்யப்பட, பாடலை அருவியெனக் கொட்டுகிறார்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).

அதே போல 'த' எனும் எழுத்து மட்டும் கொண்ட பாடலை ஒருவர் பாடச் சொல்கிறார்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?)


பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்

திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள்

இருந்திடத்தில் சும்மா
இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்! ..


அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;

ஒப்பரிய மாமன் உறிதிருடி; - சப்பைக்கால்

அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத் தானுக்குஇங்கு

எண்ணும் பெருமை இவை..வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டுஒருவன்

கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கஇக் காசினியில்
அல்ஆர்
பொழில்தில்லை அம்பல வாணற்குஓர் அன்னைபிதா
இல்லாத
தாழ்வுஅல்ல வோஇங்ங னேஎளிது ஆனதுவே.ஆலங் குடியானை ஆலாலம் உண்டானை

ஆலம் குடியான் என்று ஆர் சொன்னார்? - ஆலம்

குடியானே ஆயின் குவலயத்தோர் எல்லாம்

மடியாரோ மண்மீதிலே.பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;

ஆனைக்குக் கால்பதினேழ் ஆனதே; மானே! கேள்!

முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;

கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!ஒன்றுஇரண்டு, மூன்றுநான்கு, ஐந்துஆறு, ஏழ்எட்டு

ஒன்பதுபத் துப்பதி னொன்று - பன்னிரண்டு
பதின்
மூன்றுபதி னான்குபதி னைந்து
பதி னாறுபதி னேழ்பதி னெட்டு.வாரிக் களத்துஅடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்

போரில் சிறந்து பொலிவுஆகும் - சீர்உற்ற

செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்

வைக்கோலும் மால்யானை ஆம்.ஆடிக் குடத்துஅடையும் ஆடும்போ தேஇரையும்

முடித் திறக்கின் முகம்காட்டும் - ஓடிமண்டை

பற்றில் பரபரஎனும் பாரில்பிண் ணாக்கும்உண்டாம்

உற்றிடும்பாம்பு என்எனவே ஓது.சுருக்குஅவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்

பொருக்குஉலர்ந்த வாயா! புலையா! - திருக்குடந்தைக்

கோட்டானே! நாயே! குரங்கே! உனைஒருத்தி

போட்டாளே வேலையற்றுப் போய்!ஆண்டி குயவா! அடா!உன்பெண் டாட்டிதனைத்

தோண்டிஒன்று கேட்டேன் துரத்தினாள் -
வேண்டிஇரு
கைக்கரகம் கேட்டேன்நான் கால்அதனைத் தூக்கியே
சக்கரத்தைக் காட்டினாள் தான்!


இதை எல்லாம் படித்து விட்டு, தமிழ்ப் படப் பாடல்கள் உங்கள் நினைவுக்கு வந்தால், கம்பேனி பொறுப்பல்ல.

Wednesday, 18 August, 2010

உமா சங்கருக்காக ஒரு கண்டனமும், அரசிடம் ஒரு வேண்டுகோளும்ஊழல் நிறைந்த ஆட்சி நிலைத்து நிற்காது என்பது மனித நாகரீகம் தொடக்கத்தில் இருந்து நாம் பார்த்து கொண்டிருப்பது தான்!, எல்லாம் தெரிந்துமே இந்தியா ஊழலில் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது, இதை சொல்வது சர்வதேச புள்ளிவிபரம்! அவர்களுக்கு தெரிந்தே இவ்வளவு என்றால் நாம் தினம் தினம் பார்த்து கொண்டிருப்பது எத்தனை, கால ஓட்டத்தில் மறைந்தது, அதை நாம் மறந்தது எத்தனை! சரி நமக்கு தெரிந்தே இத்தனை என்றால் நமக்கு தெரியாமல் எத்தனை இருக்கும்! ஆக ஊழலில் இந்தியாவின் இடம் டாப்பில் இருப்பது கண்கூடாக தெரிகிறது!

இதெற்கெல்லாம் யார் காரணம்!?, இந்தியன் படத்தில் ஒரு வசனம் வருமே, ”மற்ற நாடுகளில் கடமையை மீறுவதற்கு லஞ்சம், நம் நாட்டில் மட்டும் தான் கடமையை செய்வதற்கே லஞ்சம்”, பத்து, இருபது வாங்குபவனால் சமுதாயத்திற்கு பெரிய இழப்பு வந்துவிடுமா என்றால் இல்லை, அவைகள் உணவக டிப்ஸ் போல் ஆகிவிட்டது, ஆனால் கோடிக்கணக்கான பணம் லஞ்சம் மற்றும் ஊழலில் இந்தியாவில் களவாடப்படுகிறது, கூடவே நம் உரிமைகளும்.

சினிமாவில் ஹீரோ சாகசம் செய்தால் விசில் அடித்து கைத்தட்டுவோம், உண்மையில் அதே போன்ற துணிச்சலான செயலை ஒருவன் செய்தால், ”பாவம் பிழைக்கத்தெரியாதவன்.” உண்மையில் இம்மாதிரி பிழைக்க தகுதியில்லாத, கையாலாகாத, அதிகாரமையத்தை எதிர்க்கத்தெரியாத பொதுமக்களால் பல பல நேர்மையான அதிகாரிகள் தங்கள் பணியை விட்டே விலகி சென்றிருக்கிறார்கள்!, உங்களைப் போய் எதாவது சாகசம் செய்ய சொன்னார்களா? ஒருவன் அதிகாரமையத்திற்கு எதிராக போராடுகிறான், உனது ஆதரவு கரத்தையாவது நீட்டலாமே!

நூத்துக்கு முப்பத்தியைந்து மதிப்பெண்கள் பெற்று ”ஆத்தா நானும் பாஸாகிட்டேன்” என்று எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சொல்ல முடியாது! அத்தனையும் உழைப்பு, அவர்களது நோக்கமும் மக்களுக்கு தொண்டாட்றுவது, ஆனால் அதிகாரமையத்தில் அமர்ந்தவுடன் தனக்கும் அதே புத்தி வந்து எத்த்னையோ அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு சலாம் போட்டு தங்களது கடமையை மறக்கிறார்கள், அவர்களுக்கு மத்தியில் உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அவர்கள், தன்ன்னால் கண்டுபிடிக்கபட்ட ஊழல் காரணமாக தற்பொழுது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்!

அவரது படிப்பை அவமான படுத்தியிருக்கிறார்கள், அவரது நேர்மையை அவமான படுத்தியிருக்கிறார்கள் காரணம், அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யபட்ட காரணமாகயிருந்த மயிருக்கும் பெறாத சாதி!, உமாசங்கர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட வேண்டும்! அவர் கண்டுபிடித்த ஊழல்கள் அனைத்தும் உடனே விசாரிக்கப்பட வேண்டும்!, இவைகளை மறுக்கும் தமிழக அரசிற்கு எனது கண்டணங்களை தெரிவித்து கொள்கிறேன்!

உமாசங்கர் பற்றி முழுமையாக அறிய

Sunday, 8 August, 2010

தனி மரம்


நேற்றோர் கனாக் கண்டேன்.

நீரும் சதையும் போல
நெடிதுயர்ந்து நின்று,
பின் வீழ்ந்த ஒரு மரம்
பேசிற்று என்னிடம்

என் வேர் கொண்டு
நீர் குடித்து
நெடிதுயர்ந்து நின்று
நிழல் தந்தேனே
கூடவே
நான் அருந்தும் நீரை
மழையாய்த் தந்தேன்.

நீளும் நெடும் பகலில்
என்னை நினைத்தீரே!

ஓர் வெம்மையற்ற காலத்தில்
என்னை வெட்ட
முன் நின்றீரே?

கொலையோ உமது தொழில்?

கொற்றவன் வடிவில் நீயுமா?

கொன்று முடித்து
வாகனம் அழைத்து
என்னை அழைத்து
ஏற்றுகையில்
உமக்கு தோன்றியிருக்குமா

உன் பிள்ளை
சோறு சாப்பிட
என் கிளையில் வாழும்
பறவையின் உருவம் காண்பித்ததை?

என்றேனும் உன்
குடும்பம்
கலைத்ததுண்டா நான்?

என்றும் உன் வேர்வைக்கு
விசிறியாக
வேண்டும் நான்.

இன்று
உன் சாலைப் பயணத்திற்கு
தடையோ நான்?

நான்
உன் தாய் !


இன்று நீ
எழுதுகின்றாயே
மேசைப் பலகை,
அதுவும் நான்.

நேற்றொரு
காதல் கடிதம் வந்ததே ,
அதன் தாளும் என் உறவு.

நினைப்பாயோ நீ?

நீ சிறு வயதில்
வேப்பிலை அடிக்கப்பட்டு
பூரண குணமாக்கப் பட்டதை ?

நீ என் சேய்.

நீ என் அடி மரம் உலுக்கும்
போதெல்லாம்
என் நெஞ்சம்
நிறைவுறும்


இன்னொரு முறை
என்
அடி வேரை
அறுக்காதே.


தனி மரம்

Tuesday, 27 July, 2010

ஞாயிறு போற்றுக... ஞாயிறு போற்றுக...
அன்புடை மக்காள்,
யாவரும் கேளீர்!

என்றேனும் யோசித்ததுண்டா
ஓர் உயிரின்
உயிர் பிரியும் வாதையை?

அநேக ஞாயிறுகளில்
கையில் சிறு பையோடு
உயிர் பிரிந்த உடலை
வெட்டிக் கொண்டுபோகக்
காத்திருக்கும் கூட்டத்தில்
நீங்கள் இருந்ததுண்டா?

சதையை வெட்டி,
எலும்பை ஒதுக்கி,
குருதி ஒட்டிய
பிண்டப் பாதியின்
கடைசி நிமிடங்களை
என்றேனும் உணர்ந்திருக்குமா
அதை சமைத்துத்
தந்த பாத்திரங்கள்?

காலை மெட்டி
உடலைச் சாய்த்து
கழுத்தை அறுக்கையில்
மரண வலி கொண்டு
கூப்பாடிடும்
பாவ ஓலத்தைக்
கேட்டிருக்குமா
குருதி வெளியேற்றிய
கூராயுதம்?

தானும் வெட்டுண்டு
தன்மேல் வெட்டுப்படும்
கூறுகளின்
கையறு நிலையை
சிறு விநாடியேனும்
கருத்தில்
கொண்டிருக்குமா
மர முட்டுகள்?

கொண்டதில் இருந்து
கொடுத்தது போக
மீந்து தெறிக்கும்
சிதறல்களில் உள்ளதே
தனது உடலுக்குள்ளும் உண்டென
என்றேனும் எண்ணியிருக்குமா
கொண்டோடக் காத்திருக்கும்
தெருவோர நாய்கள்?

அந்தி முடிந்ததும்
மீந்ததை
சமைத்து சுவைக்கும்
அந்தக் கறிக்காரனுக்கு
கனவிலேனும் வந்திருக்குமா
வெட்டுப்பட்ட அந்த ஆட்டின்
குட்டியைப்போல்
தனக்கும் ஒரு குட்டி மகன்
வீட்டில் உண்டெனும் சிந்தனை?

Tuesday, 20 July, 2010

வெட்சிப்பூவகையில் வெளியேறும் வாயோடு
சுளித்துக் கொண்டிருந்தன
சுமைகள்.

வருந்தி மோதும்
வாதத்தில்
கருத்த சூரியனின் கண்கள்.

பனியோடு பேசும்
கூர்மை மான்களின்
ஒப்பற்ற சிலேடை.

தாவி வரும்
தாளம் தரும்
தணியாத தகிப்பு.

கொம்போடு அலையும்
சூனியங்களின்
பார்வையற்ற நிலைப்பு.

நாப்பத்தி ஒம்போது
நாவுகளின்
நடனப் பிளவு.

கூர்மையற்ற
வெளிச்சங்களோடு
அபாயமாய் அழகு.

புதைந்த வெளிகளில்
புலர்ந்த பன்னீரில் தேம்பும்
இலக்கற்ற விண்ணின் தேம்பல்.

ஆதவனின் நிழல்
கொண்டாடும்
மைய வெறுப்பு.

சுழிய பந்தம் தேடிய
ஒப்பற்ற
கருநிலாக்கள்

பாடிய மௌனம்
பாடா ஓசை
கேளா நீட்சி.

அவையத்து முந்தீர்...

அனைத்தும் நீளின்
கொற்றனின் கூர்நிசி
கொடுவேல் ஆகுமோ?

Tuesday, 29 June, 2010

காதல் வாழிய.


நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே''

என்ற சங்கப்பாடல் உங்களில் யாருக்கேனும் நினைவிருக்கலாம்.
சற்றே நினைவிருத்திப்பாருங்கள்.

பரிசில் வேண்டிஅரசனைப் பார்க்கச் சென்று கொண்டிருந்த - ஓய்வு எடுக்கும் போது இதனை இயற்றிய சத்திமுற்றப்புலவர், தனது காதல் மனைவிக்கு குறுஞ்செய்தியாக, தான் எப்படி இருக்கிறேன் என்பதை நாரை மூலம் தூதாக செய்தி அனுப்புகிறார்.

''
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி''

- அதாவது, மழையில் நனைந்திருக்கும் சுவரில் உள்ள பல்லி, 'ஏதாவது என் காதல் கணவனைப் பற்றிச் சொல்லும் என்று எதிர் பார்த்திருக்கும் எனது மனைவியைக் கண்டு , குளிரில், ஆடை குறைந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே என்றவாறு நானிருக்கிறேன் என்று
சொல்லு.' என்கின்றார்.

இதே சூழலில் நான் முன்பொரு சமயம் இருந்து, பின் வீடு திரும்பி என் காதல் மனையாளைக் கண்டபின் அவள், என்னிடம் ஊடல் கொண்டாள்.

போன காரியம் முடியலியே (அவருக்கு முடிந்தது) , எப்படி என் காதல் மனையாளைக் கண் கொண்டு பார்ப்பது என்றெண்ணி, ஓர் ஓரம் அமர்ந்து (அவள் பெயரிட்டழைத்து) 'ஒரு தேனீர் கொடம்மா ' என்றேன்.

அவளுக்கும் தெரியும், இவன் எதுவும் கொணரவில்லையென.

கொணர்ந்திருந்தால், கூடிக் கொஞ்சியிருப்பேன் எனத் தெரியும்.

ஆனாலும் கொணர்ந்தாள்.

கொண்டு வந்து வைத்தாள்.

'நங்கென்று' உச்சி வானம் என் தலை மீது வந்து வீழும் ஓசை போல்.

அதிலும் தெரிந்தது, என் காதல் மனைவியின் ''காதல்"

காதல் வாழிய.

Monday, 28 June, 2010

தமிழ்ச் செம்மொழி மாநாடு


கோவைல நடந்த இணையத்தமிழ் மாநாடு பற்றி பதிவு போடலாம்னு பாத்தா, நமக்கு முன்னோடிகள் நிறையப்பேரு பதிவு போட்டுட்டாங்க.

மாதிரிக்கு சிலரோட லிங்க் குடுத்திருக்கேன்.

லதானந்த்

சஞ்சய் காந்தி


படிச்சிட்டு இருங்க.

நான் என்னோட பதிவ ரெடி பண்ணிர்றேன்.

Thursday, 17 June, 2010

வளமைத்தமிழ்


பண்டைய தமிழ் எண் வடிவங்கள்...

தமிழ் எண்கள்


* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

இதன் மூலப்பதிவு : தங்கத்தமிழ்

நன்றி : தோழிதமிழ் எண்வரிசையும்... அளவீட்டு முறைகளும்...

ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.

இதன் மூலப்பதிவு : தங்கத்தமிழ்

நன்றி : தோழி

Tuesday, 11 May, 2010

விருந்தினர் போற்றுதும்


நல்ல வாய்ப்பு.
அருமையான இடம்.நல்ல மனிதரின் அழைப்பு.

இவை யாவும் தவறிப் போய் விடுமோ என்ற அச்சம் மனதில் அதிகமாகிக்கொண்டே இருந்தது. காரணம், நம் ஆப்பீசரின் ''ஊட்டிக்கு வாங்க'' என்ற அன்பான ழைப்பு. செல்வதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. செல்லும் நேரம் நெருங்க நெருங்க, இங்கே பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே இருந்தது.

ஒரு வழியாக எல்லா ஆணியையும் பிடுங்கி விட்டு, பலத்த மழையினூடேஊட்டிக்கு சென்று சே
ரும் போது மணி பத்து.

ஆப்பீசரையும், இன்ன பிற பதிவர்களையும் பார்க்கும் ஆவலில் தங்குமிடம்நுழைந்தால், ஆப்பீசர் பலமாக வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். அத்தனையும் உபயோகமான தகவல்கள். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளது . (உதாரணம் - முட்டையிட்டுபாலூட்டும் விலங்கு ...)

ஆனால் நான் சென்று சேரும் முன்பே பல தகவல் பக்கங்கள் புரட்டப்பட்டிருந்தன
.
ஆப்பீசருடன் இருந்தால், நேரங்கள் மிக சுவையாகக் கழியும் என்பதற்கு ஒருஎடுத்துக்காட்டு...


இரவு நேரம்... யாரென்றே தெரியாத ''ஒருவர்'' நட்ட நாடு ராத்திரியில் குளிர் காய்ந்துகொண்டு இருந்தார் என ஆப்பீசர் சொன்னது. இது வரைக்கும் அது யாரென்றேதெரியவில்லை. பேயாக இருக்குமோ என்ற பயமுறுத்தல் வேறு.
காலையில் நாங்களெல்லாம் சாப்பிட்டு முடிக்கும் வரை குளிர் இருந்தது.

அவலாஞ்சி பயணம் மிக அற்புதமாக இருந்தது. வனங்களின் '' தோற்ற மாற்றம்'' பற்றி ஒவ்வொரு டத்தையும் சுட்டிக்காட்டி கொஞ்சமும் போரடிக்காமல் விளக்கியது சுவையாக இருந்தது.
ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கு
ம் திறமைகளை வெளிக்கொணரும்

அவரின்
பா
ங்கேனி.
''க்கிடிகேட்'' என்ற இடம். (நன்றி - ஆப்பீசரின் நிமோனிக்ஸ்) வாழ்க்கையில் பார்க்க வேண்டிய, ஆனால் எல்லோராலும் பார்க்க இயலாதஇடம். ஆப்பீசர் சிறப்பு அனுமதியின் பேரில் அழைத்துக்கொண்டு சென்றதன்மூலம் வாழ்வின் மிகச் சிறப்பான, சந்தோசமான தருணங்களை ணரவைத்தது.

உணவுக்குப் பின் இளைப்பாறல் காரணமாக நடந்த சிறு போட்டியில், ஆப்பீசர்சந்தோசமாக ''ஆணி பிடுங்கினார்" (அதை போட்டோ எடுக்க தவறி விட்டேன்)

சுருக்
கமாகச் சொன்னால், அனைவரையும் அழைத்துச் சென்று மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து ... இத்தகைய மனம் எல்லோருக்கும் வந்து விடாது.

எல்லாவற்றிற்கும் மேலாக, திருமதி ஆப்பீசரின் மேற்பார்வையில் தயாரானஉணவு ... மிகச் சுவையானது, அன்பும் கலந்திருந்தது.

கொஞ்சமும் பந்தா இல்லாமல் பழகிய ஆப்பீசரின் புதல்வன் பாலாஜியின்குணம் ... கோடி பெறும்.

தமிழ்மணம் காசி சார், வேங்கடசுப்ரமணியம், அய்யா சீனா அவர்கள், திருப்பூர்சிவா இவர்களுடனான சந்திப்புக்கு வழி செய்து தந்த ஆப்பீசருக்கு சிறப்பு நன்றி.

திருமதி சீனா அவர்களின் மனதை நெகிழ வைக்கும் அனுபவம் ... இன்னும்உள்மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இனிமேல் சுற்றுலா என்று எங்காவது சென்றால், அது ஆப்பீசர் கூடத்தான்இருக்க வேண்டும். ஆப்பீசரின் பார்த்துப் பார்த்து உபசரிக்கும் விதம், ''விருந்தினர் போற்றுதும், விருந்தினர் போற்றுதும்'' என்பதற்கான இலக்கணம் கொண்டது என்பதைசஞ்சய் ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் அன்றுதான் நேரில் அனுபவித்தேன்'' அனுபவித் ''தேன்''

ஆப்பீசர்
, மறுபடியும் எப்போ அழைப்பீங்க? ''

லிங்க் :

வந்தாங்க! வந்தாங்க! ஊட்டிக்கு வந்தாங்க!

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.


அவலாஞ்சி - பயண அனுபவம்.

ஊட்டி மலையில் உறவு

Monday, 10 May, 2010

மீண்டு வா சகோதரி


சகோதரி கிருபாநந்தினி நல்லபடி குணமடைய பிரார்த்திப்போம். அவரின் எழுத்துக்களை நாம் மீண்டும் படிக்க வேண்டும்.


மேலதிக விபரங்களுக்கு....

Sunday, 2 May, 2010

ஆப்பீசர், நொதுமலாளரா?
தனது பதிவில் ஆப்பீசர் ஒருமுறை, "முன்னாள் மற்றும் இன்னாள் நண்பர்கள், நொதுமலாளர்கள், மூத்த, நடுத்தர, இளைய பதிவர்கள் அனைவரையும் அழைக்கிறேன். சரியா?" என்று பதிவிட்டிருந்தார்.

அதில், நொதுமலாளர் என்ற வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் புரியவில்லை.சரி, ஆப்பீசர், தமிழ் கற்றறிந்தவர், நன்குணர்ந்தவர், எதோ சொல்லி இருக்கிறார் என நினைத்துக்கொண்டே அதன் பொருள் என்னவென்று யோசித்தேன். ''அறிமுகமில்லாதோர்'' என்ற பொருள் என் மனதில் தோன்றியது.

பொதுவாக, மொழியறிவு என்பது, நமது சுய ஆர்வம் + கற்றறிதல் + கற்பித்தல் + மேன்மை கொள்ளும் ஆர்வம் ஆகியவை அடங்கியது. இதில், கற்பித்தல் என்பது சொல்லிக்கொடுக்கும் ஆசிரியனின் திறமை.

எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் (பள்ளிப் பருவம் தொட்டு, இன்று வரை) எல்லோரும் தகுதி வாய்ந்தவர்கள். அதனால் தான் இன்று, ஏதோ எனக்கு தமிழின் மேல் கொஞ்சமேனும் ஆர்வம் இருக்கின்றது.

சரி, '' நொதுமலாளர்'' என்பதன் பொருள் என்ன?
எனக்குத் தோன்றியது ஒன்றாக இருந்தாலும், உண்மைப் பொருள் என்ன?

அறிய முற்படுகையில்,
அகராதி தேடினேன்.
அதில் ''
umpire'' என்ற வார்த்தை கண்டேன்.
http://www.agaraadhi.com/)

பிறிதொரு தளத்தில்,
''
அயலவர் பெயர் நொதுமலாளர், வம்பலர்'' என்று கண்டேன். இருவேறு பொருள்கள் கண்டபின், வேறு யாதும் பொருள் உளதோ என அறிய முற்படுகையில்,
புறநானூற்றில் ஒரு பாடல் கண்டேன். ''நொதுமலாளர் பொது மொழி கொள்ளாது, பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி, குடி புறந்தருகுவைஆயின், நின் அடி புறந்தருகுவர், அடங்காதோரே.'' (புறநானூறு - 35)

இதன்
பொருளாக, ''சிலர் கூறும் பொது மொழியை நெஞ்சில் கொள்ளாமல் உழவர் குடியைப் பாதுகாத்து, அக்காவலால் மற்றக் குடிகளையும் பாதுகாப்பாயானால், உன் பகைவர் உன்னடி போற்றுவர்," எனக்கூறியுள்ளனர்.

முடிவில்
, எனக்குப் பெரும் குழப்பமே ஏற்பட்டது. - தமிழால் அல்ல. அதன் பொருளை புரிந்து கொள்ளாததால்.

இனி, தமிழ் கற்றுணர்ந்த ஆப்பீசரே பொருளை விளக்கட்டும்.