Tuesday, 27 July, 2010

ஞாயிறு போற்றுக... ஞாயிறு போற்றுக...
அன்புடை மக்காள்,
யாவரும் கேளீர்!

என்றேனும் யோசித்ததுண்டா
ஓர் உயிரின்
உயிர் பிரியும் வாதையை?

அநேக ஞாயிறுகளில்
கையில் சிறு பையோடு
உயிர் பிரிந்த உடலை
வெட்டிக் கொண்டுபோகக்
காத்திருக்கும் கூட்டத்தில்
நீங்கள் இருந்ததுண்டா?

சதையை வெட்டி,
எலும்பை ஒதுக்கி,
குருதி ஒட்டிய
பிண்டப் பாதியின்
கடைசி நிமிடங்களை
என்றேனும் உணர்ந்திருக்குமா
அதை சமைத்துத்
தந்த பாத்திரங்கள்?

காலை மெட்டி
உடலைச் சாய்த்து
கழுத்தை அறுக்கையில்
மரண வலி கொண்டு
கூப்பாடிடும்
பாவ ஓலத்தைக்
கேட்டிருக்குமா
குருதி வெளியேற்றிய
கூராயுதம்?

தானும் வெட்டுண்டு
தன்மேல் வெட்டுப்படும்
கூறுகளின்
கையறு நிலையை
சிறு விநாடியேனும்
கருத்தில்
கொண்டிருக்குமா
மர முட்டுகள்?

கொண்டதில் இருந்து
கொடுத்தது போக
மீந்து தெறிக்கும்
சிதறல்களில் உள்ளதே
தனது உடலுக்குள்ளும் உண்டென
என்றேனும் எண்ணியிருக்குமா
கொண்டோடக் காத்திருக்கும்
தெருவோர நாய்கள்?

அந்தி முடிந்ததும்
மீந்ததை
சமைத்து சுவைக்கும்
அந்தக் கறிக்காரனுக்கு
கனவிலேனும் வந்திருக்குமா
வெட்டுப்பட்ட அந்த ஆட்டின்
குட்டியைப்போல்
தனக்கும் ஒரு குட்டி மகன்
வீட்டில் உண்டெனும் சிந்தனை?

13 comments:

 1. //வெட்டுப்பட்ட அந்த ஆட்டின்
  குட்டியைப்போல்
  தனக்கும் ஒரு குட்டி மகன்
  வீட்டில் உண்டெனும் சிந்தனை?//

  :(

  தல! அழவிடாதிங்க, ஞாயித்துகிழமை தான் வீட்ல மட்டன்!

  ReplyDelete
 2. சாப்பிடுங்க.. சாப்பிடுங்க..

  ReplyDelete
 3. கவிதையோ... என்னமோ சொல்லியிருக்கீங்க.படம் பாத்தேன்.உண்மையா முடில.அப்புறமா வரேன் !

  ReplyDelete
 4. //உண்மையா முடில//

  ஏன்? என்னாச்சு ஹேமா?

  ReplyDelete
 5. நல்ல வேலை நாங்கள் சைவப் பிரியர்கள்

  அதனால் இந்த கொடுமைகளை பார்த்தது கூட கிடையாது :)

  ReplyDelete
 6. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

  ReplyDelete
 7. //அநேக ஞாயிறுகளில்
  கையில் சிறு பையோடு
  உயிர் பிரிந்த உடலை
  வெட்டிக் கொண்டுபோகக்
  காத்திருக்கும் கூட்டத்தில்
  நீங்கள் இருந்ததுண்டா?
  //

  நான் இருந்திருக்கிறேன்.. உயிரின் வலியை நினைத்து வேதனைப் பட்டிருக்கிறேன் .. தவிர்க்க நினைக்கிறேன்.. சிறுவயதிலிருந்தே பழக்கப் பட்டு விட்டதால் விடுவது கடினம்.. குறைக்க முயற்சி செய்யும்போதெல்லாம் தோற்றுப் போகிறேன்.. உண்மையைச் சொல்லி விட்டேன்.. நம்பினால் நம்புங்கள்...

  ReplyDelete
 8. //சதையை வெட்டி,
  எலும்பை ஒதுக்கி,
  குருதி ஒட்டிய
  பிண்டப் பாதியின்
  கடைசி நிமிடங்களை
  என்றேனும் உணர்ந்திருக்குமா
  அதை சமைத்துத்
  தந்த பாத்திரங்கள்?//

  உயிருள்ள மனிதனே உணர மறுக்கும் காலத்தில் ஆக்ரினைப் பாத்திரங்கள் உணர்ந்திருந்தால் என்ன உணராவிட்டால் என்ன...?

  ReplyDelete
 9. //காலை மெட்டி
  உடலைச் சாய்த்து
  கழுத்தை அறுக்கையில்
  மரண வலி கொண்டு
  கூப்பாடிடும்
  பாவ ஓலத்தைக்
  கேட்டிருக்குமா
  குருதி வெளியேற்றிய
  கூராயுதம்?//

  கடைக்கு வந்தாலும் என்னிடத்தில் கூடையைக் கொடுத்து விட்டு தூரமாக நின்று அறுபடும் அந்தக் குழந்தைகளைப் பார்த்து வருத்தப் படும் எனது அம்மாவை நான் பார்க்கிறேன்.. ருசி கண்ட நாக்கு தான் பிரச்சினை என்பது எனக்கு விளங்கும்.. இதுவும் குடிபோதை போல் ஒரு போதை தான் .. மாறிவிடுவேன் என்று நம்புகிறேன்..

  ReplyDelete
 10. //
  கொண்டதில் இருந்து
  கொடுத்தது போக
  மீந்து தெறிக்கும்
  சிதறல்களில் உள்ளதே
  தனது உடலுக்குள்ளும் உண்டென
  என்றேனும் எண்ணியிருக்குமா
  கொண்டோடக் காத்திருக்கும்
  தெருவோர நாய்கள்?//

  இறைவனின் படைப்பு அது தான்.. அழகான மானைப் படைத்த அதே சக்தி தான் அதை அடித்துக் கொடூரமாகக் கொன்று குடலைக் கிழித்துச் சாப்பிடும் புலியையும் படைத்திருக்கிறது.. அதுவும் இல்லாமல், எதற்கும் சிக்காமல் தப்பி வாழும் உயிர்களுக்கும் இயற்கையே விடுதலை அளிக்கிறது.. ஆக எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை என்பதையே இயற்கை நமக்கு உணர்த்துகிறது. நமது வாயிலிருக்கும் சிங்கப் பல்லும் நாம் சதையைக் கிழித்துச் சாப்பிட ஏற்றவாறு படைக்கப் பட்டுள்ளவர்கள் என்பதை நமது பரிணாம அறிவியல் நமக்குச் சொல்கிறது. ஆனால் இவை அனைத்தையும் மீறி நமக்கு பகுத்தறிவு படைக்கப் பட்டுள்ளது எதற்காக என்றால் பிற உயிர்களின் வலியை நாம் உணரவேண்டும் என்பதற்காகத் தான்.. புலனடக்கம் நாம் எல்லோரும் பின்பற்ற முடியாத கஷ்டமான விஷயம் தான். ஆனால் முயற்சிக்கலாம்..

  ReplyDelete
 11. மக்கள் என்றிருந்தாலும் மாமிசம் சாப்பிடுவான் என்பதால் தான் நம் முன்னோர்கள், வாரம் ஒருமுறை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர் .. அதுவும் இல்லாமல் பல்வேறு வகையான விழாக்களையும் விரத காலங்களையும் ஏற்படுத்தி இறைச்சி சாப்பிடுவதை முடிந்தவரை தடுக்க முயற்சிக்கின்றனர்.. என்ன செய்ய...

  ReplyDelete
 12. ஒட்டுமொத்தமாக அடைக்கப் பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப் படும் மாடுகளைப் பார்க்கும்போது, உஷ்ணத்தில் புழுங்கும் கோழிகளைப் பார்க்கும்போது அதற்கு ஒரு வீடுபேறு விரைவில் கிடைக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது..

  உங்கள் எழுத்து என்னை மிகவும் யோசிக்க வைத்திருக்கிறது..

  ReplyDelete
 13. nanbare naan ungalai vazhi mozhigiren sirapana padhivu

  ReplyDelete