Saturday 13 March, 2010

வடை போச்சே!


முற்பிறவி பாவங்களை எல்லாம் போக்குவதற்கு அப்பப்போ கோயில் பக்கம் போவதுண்டு. அப்படித்தான் போன சனிக்கிழம கிளம்பி மாயவரம் போயிட்டு எங்க அப்பன் சிவன பாத்துட்டு, கும்பகோணம் வந்து மத்தியானம் சதாப்தி வண்டியப் பிடிச்சு ஏறி உக்காந்தேன்.

ஜன்னலோர சீட்டுதான். காளியாகுடி ஹோட்டல் அல்வா சாப்ட்டதுல (திங்கரதுலையே இரு...) கண்ணு அப்பிடியே கொஞ்சம் சொக்குச்சு. வண்டி கிளம்பறதுக்கு முன்னாடி, ஒரு பெரியவரும், அவர் கூட குழந்தைய வெச்சுக்கிட்டு ஒரு பொண்ணும் (இன்னும் கல்யாணம் ஆகல) ஏறி வந்து எனக்கு முன்னாடி சீட்ல உக்காந்தாங்க.

அந்த பொண்ணோட சொந்தக்காரங்க குழந்த போல. ஒரு மூணு வயசு இருக்கும். என்னோட ஜன்னல் சீட்டுக்கு என்ன கேட்ட நேரமோ தெரியல, அந்த குழந்த என் சீட்டுல உக்காரணும்னு அடம் பிடிக்குது. நானும் தூக்கி உக்கார வெச்சிட்டேன்.

பெரியவரும், அந்த பொண்ணும் எதோ பேசிட்டே வந்தாங்க. அப்பப்போ அந்த பொண்ணு விகல்பம் இல்லாம என்கூட பேசிட்டு வந்தது. நானும் தூக்கத்த வீட்டுல போயி பாத்துக்கலாம்னு பேசிட்டே வந்தேன் (எப்படியாவது மனசுல இடம் பிடிச்சிரனும்னு தான்).

நடுவுல திருச்சில வண்டி நிக்கவும், கொழந்த பிஸ்கட் கேட்டுது. பெரியவர் போயி வாங்கிட்டு வர முடியாது பாவம். நானா வாலண்டையர்ஆ போயி ரெண்டு பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வந்து குடுத்தேன். கொழந்த முகம் சந்தோசமா ஆகிடிச்சு.

வண்டி கிளம்பி சித்த நேரம் ஆனதும், பயில இருந்த விகடனை எடுத்து கையில வெச்சு படிக்க ஆரம்பிச்சேன்.

பெரியவரு எந்திருச்சு டாய்லெட் போனாரு.

அடுத்த செகண்ட் அந்த பொண்ணு மொபைல் எடுத்து யாருகிட்டயோ ஹஸ்கி வாய்ஸ்ல பேசுச்சு. அது பேசறத பாத்தா அதோட லவர் போல.

'அடடா, வடை போச்சே!' னு வருத்தமாகிடுச்சு.

அந்த வாண்டு (அதாங்க கொழந்த - இனி மேல் என்ன கொழந்த?) என்ன பண்ணான் தெரியுமா?

பிஸ்கட் பாக்கெட்டை என்கிட்டே நீட்டிட்டே சொன்னான்
- '' மாமா, பிஸ்கோத்து''

--------------------------------------------------------------------------------------------

ஞானம் வரட்டும்


சித்தர்கள், சித்தர்கள் என்று கண்ட கண்ட கழிசடைகள் எல்லாம் சொல்லிக்கொண்டு உலா வருகிறார்களே, அந்த ஆசாமிகளில் ஒருத்தனுக்காவது சித்தர் என்றால் என்னவென்று பொருள் தெரிந்திருக்குமா?

டிவிக்களில் பல போலிகள் ''சித்தர்'' வேடம் தரித்து பலன் சொல்லுவதையும், நமது அப்பாவி பொது ஜனங்கள் வாயை திறந்து வைத்துக் கொண்டு அதைக் கேட்டு விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வதும், அனேகமாக எல்லா வீடுகளிலும் நடப்பதே.

நமக்கும் கடவுளுக்கும் நடுவில் சாமியார்கள் என்ன புரோக்கர்களா?

புனிதமான ''சித்தர்'' என்ற பதத்தை உபயோகிக்க கூடிய தகுதி இன்றைக்கு யாருக்குமே இல்லை.

''சித்தர்'' என்ற சொல்லுக்கு உரிய இலக்கணங்கள் படி வாழ்வோடினைந்து பிறவா பேரின்ப நிலை அடைந்த ஒருவர் - சமீப காலத்தில் வள்ளலார் மட்டுமே.

''சித்தர்'' என்பது என்ன வகை? எப்படி வாழ்ந்தால் சித்தர் ஆகலாம்? ''சித்தர்கள்'' எப்படி இருப்பார்கள்? இன்ன பிற கேள்விகளுக்கும் அடுத்த பதிவில் தெளிவான மறுக்க முடியாத விளக்கங்களுடனும், தெளிவுரைகளுடனும் சந்திக்கிறேன்.
அது வரை நீங்களும் கீழ்க்கண்ட பாடலை படித்து பொருளுணர்ந்து கொள்ள முயலுங்கள்.

பாடல்களை படியுங்கள். ஞானம் வரட்டும். மங்களம் உண்டாகட்டும்.

''அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.
அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!'' - சிவவாக்கியர்.

''இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரிக்குமால் பிரமனும் அண்டம்ஏழு அகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிலாத தூணிலே
நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே! ''- சிவவாக்கியர்.

''மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பீரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!''- சிவவாக்கியர்.

''சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே
நிட்டைஏது ஞானமேது? நீரிருந்த அட்சரம்
பட்டைஏது? சொல்லீரே பாதகக் கபடரே?'' - சிவவாக்கியர்.

''காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே?
வேணும் என்று அவ்வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்ற சீவன் தான்சிவம் அதாகுமே. ''- சிவவாக்கியர்.

-----------------------------------------------------------------------------------