
நேற்றோர் கனாக் கண்டேன்.
நீரும் சதையும் போல
நெடிதுயர்ந்து நின்று,
பின் வீழ்ந்த ஒரு மரம்
பேசிற்று என்னிடம்
என் வேர் கொண்டு
நீர் குடித்து
நெடிதுயர்ந்து நின்று
நிழல் தந்தேனே
கூடவே
நான் அருந்தும் நீரை
மழையாய்த் தந்தேன்.
நீளும் நெடும் பகலில்
என்னை நினைத்தீரே!
ஓர் வெம்மையற்ற காலத்தில்
என்னை வெட்ட
முன் நின்றீரே?
கொலையோ உமது தொழில்?
கொற்றவன் வடிவில் நீயுமா?
கொன்று முடித்து
வாகனம் அழைத்து
என்னை அழைத்து
ஏற்றுகையில்
உமக்கு தோன்றியிருக்குமா
உன் பிள்ளை
சோறு சாப்பிட
என் கிளையில் வாழும்
பறவையின் உருவம் காண்பித்ததை?
என்றேனும் உன்
குடும்பம்
கலைத்ததுண்டா நான்?
என்றும் உன் வேர்வைக்கு
விசிறியாக
வேண்டும் நான்.
இன்று
உன் சாலைப் பயணத்திற்கு
தடையோ நான்?
நான்
உன் தாய் !
இன்று நீ
எழுதுகின்றாயே
மேசைப் பலகை,
அதுவும் நான்.
நேற்றொரு
காதல் கடிதம் வந்ததே ,
அதன் தாளும் என் உறவு.
நினைப்பாயோ நீ?
நீ சிறு வயதில்
வேப்பிலை அடிக்கப்பட்டு
பூரண குணமாக்கப் பட்டதை ?
நீ என் சேய்.
நீ என் அடி மரம் உலுக்கும்
போதெல்லாம்
என் நெஞ்சம்
நிறைவுறும்
இன்னொரு முறை
என்
அடி வேரை
அறுக்காதே.
தனி மரம்