கவிஞர் திரு. மகுடேஸ்வரன் அவர்களின் சமீபத்திய பதிவும், அது தொடர்பான பின்னூட்டங்களும் கீழே.
ஒரு சிறந்த கவிக்காவியம் எழுதியவரின் மன வருத்தங்களைக் காட்டுவதற்காகவே இந்தப் புது மாதிரியான பதிவு.
காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மரபுச் செய்யுள்களில் வடித்துப் பதிவேற்றிய பகுதிகளை இதுகாறும் வாசித்திருப்பீர்கள். இவற்றை எல்லாரும் வாசித்தீர்களா அல்லது திறந்து பார்த்துவிட்டுக் கடந்துபோய்விட்டீர்களா என்பது குறித்து எனக்கு ஐயம் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், இந்தப் பகுதிகளில் இடப்படவேண்டிய பின்னூட்டங்களின் அக்கறையின்மை என்னை அவ்வாறு எண்ணச் செய்துவிட்டது. நீங்கள் ஏதாவது கூறப்போக நான் அதுகுறித்துக் கடுமையாக எதிர்வினை ஆற்றிவிடுவேனோ என்ற அச்சம் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கலாம். மூன்றாம் தரமான அக்கப்போர் விவாதங்களில் பதிவுலக நண்பர்கள் காட்டும் முனைப்பை நம் தேசப் பிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படைப்பு விவகாரத்தில் காட்டாதது ஒன்றும் தற்செயலானது இல்லை. நீங்கள் எதற்கு யோக்கியதைப் பட்டவர்களாக இருக்கிறீர்களோ அதற்கேற்ற அரசியல், கருத்துலகம், ஆட்சித் தலைமை, கலை இலக்கியம், சமூக வாழ்க்கை போன்றவற்றுக்கே தகுதியுடையவர்கள் ஆகிறீர்கள். விதிவிலக்குகளை இனங்கண்டு போற்றாதவரை முன்னெடுத்து முழங்காதவரை இங்கே எதுவும் மாறாது.
காந்தியின் நிலைப்பாடுகளோடு இங்கே எல்லாரும் யாவரும் பெரிதும் முரண்படவும் செய்வோம். எனக்கும் அவரது ஒற்றைப்படையான மதவாதச் சிந்தனைகள் பல ஏற்புடையவை அல்ல. இந்தக் கவிதைகளிலே கூட ‘ஆய்பொருளில் கருத்துயர்ந்த கீதை’ போன்ற சொற்றொடர்களை அமைக்கும் போது எனக்குள் எளிதில் தணியாத பதற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், அதுவே காந்தியாரின் கருத்தும் என்பதால் என் நிலைப்பட்டுக்கு அங்கே என்ன வேலை ? அந்த ஒன்றோ அல்லது இன்னபிறவோ அவரைக் கண்டு வியக்கும் போற்றும் செயல்களுக்குத் தடையாக இருக்கப் போதுமானவையும் அல்ல. அந்தக் காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்து, ஏன் இந்தக் காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்தும், அவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முன்பொருமுறை நான் பெரியார் காப்பியம் எழுதுவதாக முடிவு செய்து பகுதி எழுதி முடித்தும் இருந்தேன். அதற்காகக் கத்தை கத்தையாகப் புத்தகங்கள் வாங்கிப் பெரிய தொகையாகச் சேர்த்திருந்தேன். தமிழினி பதிப்பகமும் அந்த நூலை வெளிவரவிருக்கும் நூலாக அறிவித்திருந்தது. அந்த நேரமாகப் பார்த்து பெரியார் என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகிக்கொண்டிருந்தது. முடிந்தது கதை. எங்கும் பெரியார் திரைப்படம் பற்றியே பேச்சு. கவனிக்கவும், பெரியார் என்கிற சமூகச் சீர்திருத்தவாதியைப் பற்றிய பேச்சே இல்லை. பெரியாராக சத்யராஜ் நடிக்கிறாராம், அது சிவாஜி கணேசன் நடிக்க விரும்பியிருந்த ரோலாம். பெரியார் விபச்சார விடுதிக்குப் போவது போல் காட்சிகளை எடுக்கிறார்களாம். இளையராஜா பெரியார் திரைப்படத்திற்கு இசைமயமைக்க மறுத்துவிட்டாராம். ஜோதிர்மயி பெரியாருக்கு ஜோடியாக நடிக்கிறாராம். குஷ்பு மணியம்மையாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். ஒட்டுமொத்த தமிழ்ப் பெண்களையே கேவலமாகப் பேசிய குஷ்பு அவ்வேடத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்று போலி அறிவு ஜீவிகள் மத்தியில் விவாதங்களாம். அந்த வேடத்தை ஏற்க அவரே மிகப் பொருத்தமானவராம். ஏப்ரல் மாதத்திலே ஸ்டான்லி அண்ணாதுரையாக நடிக்கிறாராம். அண்ணா ஒப்பனையில் இருக்கும் அவரோடு ஒரேயொரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒட்டுமொத்தப் படக்குழுவே போட்டிபோடுகிறதாம். விஜய் ஆதிராஜ் வீரமணியாம். தமிழ்நாடு அரசு படத்துக்கு இலட்சக் கணக்கில் மானியத்தை வாரியிறைக்கிறதாம். தமிழ்நாட்டு முதலமைச்சரே எடிட்டிங் டேபிளில் உட்காராத குறையாகப் படவேலைகளில் ஆர்வம் காட்டுகிறாராம். அடப்போங்கடா ஙொய்யாலெ... இந்த நேரத்தில் பெரியார் காப்பியத்தை எழுதவும் மாட்டேன் வெளியிடவும் மாட்டேன் என்று பதிப்பாளரிடம் தெரிவித்துவிட்டு அமர்ந்துவிட்டேன்.
காந்தியைப் பற்றியும் எழுதிக்கொண்டிருந்தபோது அவ்வாறு ஏதாவது வலிய மனத்தடை ஏற்பட்டிருக்கலாம். நான் உங்களின் உதாசீனங்களிலிருந்து ஒருவேளை தப்பியிருப்பேன்.
(கலாநேசன், வெண்புரவி, மதுரை சரவணன், கொல்லான், மோகன்குமார் ஆகியோருக்கு என் சிறப்பு நன்றிகள்)
10 comments: