
அன்புடை மக்காள்,
யாவரும் கேளீர்!
என்றேனும் யோசித்ததுண்டா
ஓர் உயிரின்
உயிர் பிரியும் வாதையை?
அநேக ஞாயிறுகளில்
கையில் சிறு பையோடு
உயிர் பிரிந்த உடலை
வெட்டிக் கொண்டுபோகக்
காத்திருக்கும் கூட்டத்தில்
நீங்கள் இருந்ததுண்டா?
சதையை வெட்டி,
எலும்பை ஒதுக்கி,
குருதி ஒட்டிய
பிண்டப் பாதியின்
கடைசி நிமிடங்களை
என்றேனும் உணர்ந்திருக்குமா
அதை சமைத்துத்
தந்த பாத்திரங்கள்?
காலை மெட்டி
உடலைச் சாய்த்து
கழுத்தை அறுக்கையில்
மரண வலி கொண்டு
கூப்பாடிடும்
பாவ ஓலத்தைக்
கேட்டிருக்குமா
குருதி வெளியேற்றிய
கூராயுதம்?
தானும் வெட்டுண்டு
தன்மேல் வெட்டுப்படும்
கூறுகளின்
கையறு நிலையை
சிறு விநாடியேனும்
கருத்தில் கொண்டிருக்குமா
மர முட்டுகள்?
கொண்டதில் இருந்து
கொடுத்தது போக
மீந்து தெறிக்கும்
சிதறல்களில் உள்ளதே
தனது உடலுக்குள்ளும் உண்டென
என்றேனும் எண்ணியிருக்குமா
கொண்டோடக் காத்திருக்கும்
தெருவோர நாய்கள்?
அந்தி முடிந்ததும்
மீந்ததை
சமைத்து சுவைக்கும்
அந்தக் கறிக்காரனுக்கு
கனவிலேனும் வந்திருக்குமா
வெட்டுப்பட்ட அந்த ஆட்டின்
குட்டியைப்போல்
தனக்கும் ஒரு குட்டி மகன்
வீட்டில் உண்டெனும் சிந்தனை?